06:41 PM 07-07-2019
சமூக செயற்பாட்டாளர் முகிலனை CBCID காவல்துறை அதிகாரிகள் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர்!
ஆசை வார்த்தை கூறி தன்னிடன் முகிலன் உல்லாசமாக இருந்ததாக நாமக்கலை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் முகிலன் கைது செய்யப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
கடந்த மார்ச் மாதம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது பாலியல் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவில் முகிலன் செய்து வந்த சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து சமூக சேவையாற்றி வந்தேன். கடந்த 26.2.2017 அன்று ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடு வாசலில் நடைபெற்ற போராட்டத்தில் அவருடன் பங்கேற்றேன். பின்னர் 27-ஆம் தேதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள காம்ப்ளக்சில் இருவரும் தங்கினோம்.
அப்போது முகிலன், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி, என்னை கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொண்டார். மேலும் இதுபோன்று பலமுறை என்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வமலர் மற்றும் காவலர்கள் முகிலன் மீது 417 (திருமணம் செய்து கொள்வதாக உத்தர வாதம் அளித்து ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் முகிலனை குளித்தலை காவலர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் மாயமான முகிலன் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரை கற்பழிப்பு வழக்கில் கைது செய்ய குளித்தலை காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக சென்னை காவல்துறைக்கு வாரண்டு அனுப்பி, அங்கேயே அவரை கைது செய்யவும் அல்லது முகிலனை குளித்தலை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி கைது செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.