சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மரியாதையை செலுத்தினார்கள்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய நேரத்தில் ஆட்சி மொழியில் ஒன்றாக தமிழை ஆக்கிட வேண்டும் என குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். இன்று மும்மொழி பாடத்திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழர்களின் எதிர்ப்பால் மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் இந்நாளில் உறுதியேற்கிறேன்.
இவ்வாறு கூறினார்.