தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்த திமுக ஒவ்வொன்றாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
திமுக-வின் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி அனைவரின் கவனத்தை கவரும் வகையில் இருந்தது. ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு 4000 ரூபாய், சாதாரண நகரப்பேருந்துகளில் (Public Transport) மகளிருக்கு இலவச பயணம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான வாக்குறுதியையும் அரசு (TN Government) விரைவில் நிறைவேற்றும் என பெண்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கேட்கப்பட்டபோது, அவர், இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நிதிநிலை ஆராயப்பட்டு பின்னர் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் இது பற்றிய தகவலை முதல்வர் சரியான நேரத்தில் அறிவிப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில் எந்தெந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Carholders) ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற பெரிய குழப்பமும் மக்களிடையே உள்ளது. ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவியின் பெயர் மட்டும் இருந்தால் போதுமா? புகைப்படமும் இருக்க வேண்டுமா? என பல கேள்விகள் மக்களிடம் உள்ளன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் தமிழக அரசின் சார்பில் வெளிவரவில்லை.
இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில மோசடி நபர்கள் ரூ.1000 பெறும் வகையில் ரேஷன் கார்டுகளில் தேவையான மாற்றங்களை செய்து தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் பல புகார்கள் வந்துள்ளன.
ALSO READ: Ration Card அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!!
ரூ.1000 பெற குடும்பத் தலைவியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ ரேஷன் அட்டையில் பதிவேற்றவோ அல்லது புதுப்பிக்கவோ வேண்டுமென்றால், அதை ஆன்லைனில் செய்து முடிக்கலாம். அதற்காக மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டிய அவசியமில்லை.
இதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.
- தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnpds.gov.in-க்கு செல்லவும்.
-‘பயனாளர் நுழைவு’ என்ற டேப்பை கிளிக் செய்து உள்ளே நுழையவும்.
- அடுத்து திறக்கும் பக்கத்தில் உங்கள் பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் போன் எண்ணை பதிவிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
- அடுத்து திறக்கும் பக்கத்தில், ‘குடும்ப உறுப்பினர்கள்’ என்பதை தேர்வு செய்யவும். இதில் நீங்கள் குடும்ப தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களின் பெயர்களைக் காணலாம்.
- இதில் புகைப்படத்தை மாற்ற, அட்டை பிறழ்வுகள் என்னும் பிரிவை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு, புதிய கோரிக்கை-ஐ தேர்ந்தெடுத்து, அதில் புகைப்படம் அல்லது பெயர் இவற்றில் செய்ய வேண்டிய மாற்றத்தை செய்யலாம்.
- தேவையான மாற்றங்களை செய்த பின்னர் ‘ஓகே’ கொடுத்து வெளியேவரவும்.
- நீங்கள் செய்த மாற்றங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்.
ஆன்லைனில் இந்த செயல்முறையை எளிதாக செய்து முடிக்கலாம். மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது.