உலக அளவில் நூற்றில் இரண்டு பேருக்கு சோரியாசிஸ் என்ற மரபணு தோல் நோய் பாதிப்பு உருவாகிறது இந்த தோல் நோய் பாதிப்பு வருபவர்கள் உடலில் தோல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறாமல் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாக கூடிய நோயாகும் இந்த நோய்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் பிரிவை சேர்ந்த தோல் நோய் மருத்துவர் ததேயுஸ் ஏற்பாட்டின் பேரில் ஜப்பான் நாட்டில் சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற வாய் வழியாக உட்கொள்ளும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்த மருந்தை ஜப்பானிலிருந்து வரவழைத்து சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 நோயாளிகளுக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டது.
இந்த சோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் குழு மற்றும் மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து மருந்து உட்கொண்ட 20 நோயாளிகளில் இரண்டு நோயாளிகள் சோரியாசிஸ் நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர் 18 நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக சோதனை முறையில் சோரியாசிஸ் நோய்க்கு ஜப்பானிலிருந்து நியூ ரீபிக்ஸ் பீட்டா குழுக்கான் என்ற பக்க விளைவு ஏற்படுத்தாத மருந்தை நோயாளிகளுக்கு வழங்கி சோரியாசிஸ் நோய்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் பிரிவு மருத்துவர்கள் தீர்வு கண்டுள்ளது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவீடன் நாட்டில் நடைபெற்ற சோரியாசிஸ் நோய் குறித்த சர்வதேச கருத்தரங்கிலும் இதன் முடிவுகள் அளிக்கப்பட்டு சர்வதேச மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.