கள்ளச்சாராய சாவுகளை தடுக்க மதுவிலக்கும், கடுமையான நடவடிக்கைகளும் தேவை என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகிலுள்ள சிலுக்குவார்ப்பட்டியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கும், கள்ளச்சாராயவிலக்கும் எந்த லட்சணத்தில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 37 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அதை செயல்படுத்தாத தமிழக அரசு கடந்த 15 ஆண்டுகளாக நேரடியாகவே டாஸ்மாக் மூலம் மதுவிற்பனை செய்து வருகிறது. அதிமுக அரசு அறிமுகப்படுத்தியத் திட்டங்களை தலைகீழாக மாற்றும் திமுக அரசு கூட, மது வணிகத்தில் அதிமுக கொள்கையையே கடைபிடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மது விற்பனை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முழு மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தி அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி கிடைத்துள்ள போதிலும் மதுவை இன்னும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. மதுவிலக்கு கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம், அதை செயல்படுத்த மறுப்பதற்கு திராவிடக் கட்சிகளின் அரசுகள் சார்பில் கூறப்படும் காரணம் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பது தான்.
எந்தக் கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டி மதுவிலக்கை தமிழக அரசு தவிர்த்து வந்ததோ, அதே கள்ளச்சாராயத்தைக் குடித்து, அதுவும் இரசாயனம் கலந்த சாராயத்தை குடித்து இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில்இருவர் உயிரிழந்ததால் அங்கு மட்டும் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கருதக்கூடாது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் எந்த இடையூறும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது தான் உண்மை. இதற்கு ஆளுங்கட்சியினரும், காவல்துறையினரும் உடந்தை என்பது ஊரறிந்த ரகசியம். திண்டுக்கல்லில் கள்ளச்சாராயத்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் ஏதோ கலந்திருந்து, அதைக் குடித்தவர்கள் உயிரிழந்ததால் தான் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. வெளியில் தெரியாமல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், வட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை தொடருகிறது.
கள்ளச்சாராயத்தைக் குடிப்பதால் தான் உயிரிழப்புகள் ஏற்படுவதாக கருதக்கூடாது. சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்திற்கும், சட்டப்படி அரசால் விற்பனை செய்யப்படும் மதுவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே குடலை அரிக்கக் கூடிய, உடல் உறுப்புகளைச் சிதைக்கக்கூடிய இரசாயனத்தை மூலப்பொருளாகக் கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றன. அரசால் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் மதுவைக்ம் குடிப்பவர்களில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என வேறுபாடு பார்க்கத் தேவையில்லை. தமிழகத்தைக் காக்க எல்லா மதுவையும் ஒழித்து மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகரித்து விடும் என்று மீண்டும், மீண்டும் கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது. மதுவுக்கு அடிமையானோருக்கு கவுன்சலிங், கள்ளச்சாராயம் குறித்து தகவல் தர வசதியாக இலவச தொலைபேசி அழைப்பு வசதி, தகவல் தரும் மக்களுக்கு ரூ.10,000 பரிசு, கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறும் காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வகுத்துள்ள மதுவிலக்கு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கள்ளச்சாராயத்தை ஒழித்து முழு மதுவிலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். எனவே, தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுடன் பா.ம.க. வகுத்துள்ள செயல்திட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.