ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யேக டிராக் செயலி தொடங்கப்படும் என தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்!!
ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பவர்கள், அது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பிரத்யேக டிராக் செயலி இரண்டு மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2020-2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று பேரவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் சண்முகையா, 108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வர ஒரு மணி நேரம் ஆகிறது என கூறினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சர்வதேச நாடுகளை விட ஆம்புலன்ஸ் விரைவாக வருவதாகத் தெரிவித்தார்.
மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராம பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வருவதாக விளக்கமளித்தார். மேலும், ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டவுடன் வாகனம் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அழைத்தவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பிரத்யேக செயலி இரண்டு மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவித்தார்.
விரைவில் 200 புதிய ஆம்புலன்ஸ் சேவை துவங்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதுதவிர ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகளை இடமாற்றம் செய்ய தனியாக 60 ஆம்புலன்ஸ் சேவை துவங்கவுள்ளதாகவும், இந்த சேவை வழக்கமான 108 இல்லாமல் தனியாக வேறொரு தொடர்பு எண் கொண்டு செயல்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.