அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரியும் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
நீட் தேர்வால் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மெரினாவில் மாணவர்கள் திரண்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். வாகனப் போக்குவரத்துக்கும் தடை செய்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு மாணவர்கள் நுழைந்தனர். அங்கு தடுப்புகளை தாண்டி ஜெயலலிதா நினைவிடத்திலேயே அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் வெளியேற போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மாணவர்கள் வெளியேற மறுத்ததால் போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்தனர்.
Students sitting at Jayalalithaa's memorial in Chennai forcefully being evicted by police;they were sitting in protest over death of #Anitha pic.twitter.com/GxweLt0Hfr
— ANI (@ANI) September 6, 2017