புதுவை பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதுவை பள்ளிக் கல்வி இயக்கம் மற்றும் அட்சய பாத்ரா அறக்கட்டளை கையொழுத்திட்டுள்ளன!
புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் கையெழுத்தானது. இந்ந ஒப்பந்தத்தில் அறக்கட்டளை துணைத்தலைவர் சன்சலாபதி தாசாவும், கல்வித்துறை செயலர் அன்பரசுவும் கையெழுத்திட்டனர். முதல்வர் நாராயணசாமி, கல்வியமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் ஒப்பந்தத்தை மாற்றிக்கொண்டனர்.
இத்திட்டமானது வரும் ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கப்படுகிறது. இதுவரை 12 மாநிலங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது 13-வதாக புதுச்சேரியில் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது.
இத்திட்டம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவிக்கையில்.. "ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடக்கமாக புதுச்சேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 300 பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு உணவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையல் கூடத்தினை இதற்காக அட்சய பாத்ரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது." என தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் சாம்பார் சாதம், 3 நாட்களுக்கு புளியோதரை, தக்காளி சாதம், வெஜிடபுள் புலவு போன்ற கலவை சாதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மதிய உணவுத்திட்டத்துக்கு அளிக்கும் மானியத்துடன் புதுச்சேரி அரசு அளிக்க வேண்டிய பங்கில் பாதியளவு மட்டுமே அட்சய பாத்ரா அறக்கட்டளைக்கு அளிக்கப்படும். எனவே ஆண்டுக்கு ரூ.2 கோடி அரசு கஜானாவில் சேமிக்கப்படும் என கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.