100வது சுதந்திர தினத்தின்போது, காஷ்மீர் இந்தியாவில் இருக்காது: வைகோ சர்ச்சை

நாட்டின் 100-வது சுதந்திர தினத்தின்போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது. இதைத்தான வரலாறு எழுதப் போகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2019, 01:27 PM IST
100வது சுதந்திர தினத்தின்போது, காஷ்மீர் இந்தியாவில் இருக்காது: வைகோ சர்ச்சை title=

சென்னை: நாட்டின் 100-வது சுதந்திர தினத்தின்போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் ம,மதிமுக பொதுசெயலாளர் வைகோ.

கடந்த 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மோடி தலைமையிலான அரசு வரலாற்று முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். மற்றொன்று லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் அறிவித்தார். 

மத்திய அரசின் இந்த முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் இந்த மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியர தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

காஷ்மீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் வைகோ பேசியபோது, காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் தான் என ஆவேசமாக பேசினார். இதனால் காங்கிரஸ் மற்றும் வைகோ இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.  

இந்நிலையில் சென்னை அண்ணா நினைவிடத்துக்கு இன்று வைகோ சென்றார். அங்கு மண்டியிட்டு அண்ணாவை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

கொளுத்தும் வெயிலில் காலணி இல்லாமல்தான் இன்று அண்ணாவின் நினைவிடத்துக்கு சென்றேன். அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்களைத் தூவி கல்லறையை தொட்டு வணங்கினேன். அப்போது நான் உயிர் பிரியும் முன் தமிழீழம் அமைய வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

நான் காஷ்மீர் பிரச்னையில் 30 சதவீதம் காங்கிரசையும், 70 சதவீதம் பாஜகவையும் தாக்கி பேசி இருக்கிறேன் என்று காங்கிரசார் விமர்சனத்துக்கு விளக்கம் அளித்தார். 

பாஜகவின் தற்போதைய காஷ்மீர்  நடவடிக்கை காரணமாக, இந்தியா தனது 100 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது  என்றும், இதைத்தான வரலாறு எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவை கொண்டு போய் சிக்க வைத்து விட்டார்கள்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Trending News