மாநில தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை ஏற்று வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதத்தை ஏற்று அக்டோபரில் தேர்தல் அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே மாதத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை அன்று, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் 3 மாதம் அவகாசம் கேட்டது.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில், அவகாசம் கேட்டு பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளும், தேர்தல் ஏற்பாடுகளும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான வேகத்தில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது,. இதனையடுத்து வரும் ஜூலை 9-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையின் போது, தண்ணீர் பிரச்சனை காரணமாகவே தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் விநியோகம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் பணிகளில் தொய்வு அடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் 60 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் வேண்டுகோள் முன்வைத்தது.
இந்நிலையில் தற்போது மாநில தேர்தல் ஆணைய வேண்டுகோளை ஏற்று வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.