ஏப்ரல் 4ம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன் நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் கடந்த 21-ம் தேதி தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்த கமல்ஹாசன், கட்சியின் பெயரையும் அறிமுகம் செய்தார். மக்கள் நீதி மய்யம் என்பது தான் கட்சியின் பெயர்.
இதை தொடர்ந்து, திருச்சியில் வரும் ஏப்ரல் 4ம் தேதி மாநாடு நடத்த போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில்,100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.
இதில், ஏப்ரல் 4ல் திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பது என்றும், முன்னதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களையும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்களை நேரடியாக சந்திப்பது என்றும் கமல் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், கட்சி உறுப்பினர்களுக்கு கமல் கறை வேட்டி கட்ட வேண்டாம், எந்த இடத்திலும் காவல்துறையினரின் உத்தரவை மீறி பேனர் வைத்தல், விளம்பரம் செய்தல் கூடாது எனவும், அனைத்து மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.