நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா என திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அழைப்பை ஏற்று, நேற்றுமுன் தினம் நடந்த ஆலோசனையின்போது தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்கவும், காவிரி விவகாரத்தில் உடனடியாக தலையிடவும் பிரதமர் மறுத்தால், பேரவையை கூட்டுகின்ற செய்தியை அறிவிப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய கட்சியின் சார்பில் இருக்கின்ற 50 எம்.பி.க்கள், திமுக சார்பில் இருக்கின்ற 4 எம்.பி.க்கள், அத்துனை பேரும் ராஜினாமா செய்வோம், என அறிவித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என கூறினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அதிமுக எம்.பி மைத்ரேயன், அதிமுக தலைமை ஆணையிட்டால் தான் மட்டும் அல்லது அனைத்து எம்.பி க்களும் ராஜினாமா செய்யத் தயார் எனக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்தின் நலனிற்காக திமுக என்ன அழுத்தம் கொடுத்தது என வினவியுள்ளார்.