PMK VCK Issue In Cuddalore Latest News Updates: பாமக தலைவர் ராமதாஸ் இன்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லத்துரை என்ற பாமக தொண்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினரால் முடியவில்லை.
கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், வன்னிய சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக்கொண்டே இருப்போம் - அதை அவர்கள் வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறையினருக்கு துப்பில்லை.
பாமக - விசிக... தொடரும் போராட்டங்கள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மஞ்சக்கொல்லை கிராம மக்களுக்கு ஆறுதல்கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்டோர் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இப்போது அடுத்தக்கட்டமாக அம்பேத்கர் சிலைகளை பாட்டாளி மக்கள் கட்சியினர் சேதப்படுத்தப்போவதாக அவதூறு பரப்பி வருகிறது" என காவல்துறையின் மீது பகீரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த விவகாரம் கடந்த சில நாள்களாகவே கடலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ராமதாஸின் இந்த அறிக்கை மேலும் இதை தீவிரமாக்கி உள்ளது.
மேலும் படிக்க | 'விஜய் உடன் ஒரே மேடையில்...' வந்து விழுந்த கேள்வி - திருமா சொன்ன பதில் என்ன?
கடந்த சில நாள்களுக்கு முன்னர் பெண் விசிகவின் கொடி கம்பத்தின் பீடத்தை இடிக்க முயலும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவமும், ராமதாஸ் தற்போது கூறிய சம்பவமும் ஒரே சம்பவம்தான். இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த சில நாள்களாக பாமகவும், விசிகவும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பகுதியில் இந்த பிரச்னை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விசிக தலைவர் திருமாவளவனும் இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, விசிக கொடியை அறுத்தது, கம்பத்தை வெட்டியது, பீடத்தை உடைக்க முயற்சித்தது ஆகியவற்றில் தொடர்புடைய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சார்ந்த அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், கடலூர் மஞ்சக்கொல்லையில் நடந்தது என்ன என்பதை இங்கு சற்று விரிவாக காணலாம்.
மஞ்சக்கொல்லை சம்பவத்தின் பின்னணி
மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சார்ந்த (Cuddalore Manjakollai) செல்லதுரை. இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். தீபாவளிக்கு அடுத்த நாள் நவ. 1ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இவர் தனது சித்தப்பா மகளின் திருமணத்திற்கு, தெரிந்தவர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் வேலையாக தனது தம்பியுடன் புவனகிரி நோக்கி பு.உடையூர் வழியாக சென்றிருக்கிறார்.
அப்போது பு.உடையூர் கிராமத்தில் பொது இடத்தில் அமர்ந்து 10க்கும் மேற்பட்டோர் மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வழியை மறிக்காமல் ஒதுங்கி சென்று மது அருந்தும்படி கூறியதாகவும், இதனால் மது அருந்திக்கொண்டிருந்தவர்களுக்கும் செல்லத்துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில் இளைஞர்கள் செல்லதுரையை சரமாரியாக தாக்கியுள்ளனர், இதில் நிலைகுலைந்த செல்லதுரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கப்பட்ட செல்லதுரை வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதும் தாக்கியவர்கள் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஏற்பட பிரச்னை ஜாதி பிரச்னையாக உருவெடுத்தது.
6 பேர் கைதும், போராட்டமும்
முன்னதாக, தாக்குதல் நடத்திய ஆறு நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நவ.2ஆம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் செல்லதுரை மீது தாக்குதல் மேற்கொண்ட மீதம் உள்ள நபர்களையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் மஞ்சகொல்லை கிராம மக்கள் விருதாச்சலம் சிதம்பரம் நெடுஞ்சாலையில் நவ.3ஆம் தேதி அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | மத்திய சுகாதாரத் துறைக்கு சுப்ரியா சாகு கடிதம் - விவரம் இதோ
இரு தரப்பும் வார்த்தை மோதல்
இந்த போராட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழியும் பங்கேற்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசியுள்ளார். அருள்மொழி அங்கு பேசிவிட்டு சென்ற பிறகு அருள் செல்வி என்ற பெண் இந்த பகுதிக்கு கட்சிகளே வேண்டாம் என கூறி பாமக மற்றும் விசிகவின் கொடி கம்பங்களை இடிக்க முற்பட்டுள்ளார். அப்போது விசிக கொடி கம்பத்தின் பீடத்தை இடிக்க முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி அங்கு சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், அவரை கண்டித்தும் விசிகவினரால் நவ.3ஆம் தேதி அன்று புவனகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட்-23 அன்று கட்சியின் கொடியை அறுத்தவர்கள், அக்டோபர்-15 அன்று கொடிக் கம்பத்தை அடியோடு அறுத்தவர்கள் ஆகியோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அப்பாவி வன்னியர் சமூக மக்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாமக மாவட்ட செயலாளர், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மற்றும் விசிக கொடிக்கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்த பெண் ஆகிய தனிநபர்களுக்கு எதிராகவும் விசிக தரப்பில் பேசினர்.
குறிப்பாக அந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநில துணை செயலாளர் செல்விமுருகன், விசிக கொடிக் கம்பத்தை அறுத்தவர்களின் கழுத்தை அறுப்போம் என்றும் கலவரத்தைத் தூண்டும்படி பேசும் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழியின் கழுத்தையும் அறுத்துருவோம் என்றும் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன் என்பவரும் கண்டிக்கத்தக்க வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இவர்களின் இந்த பேச்சு பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியது, பல்வேறு ஆர்ப்பட்டங்களுக்கும் வழிவகுத்தது.
விசிக ஒழுங்கு நடவடிக்கை
இந்நிலையில், விசிக தரப்பில் இருந்து வ.க. செல்லப்பன் மற்றும் செல்வி முருகன் ஆகிய இருவரும் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக இன்று (நவ. 8) அறிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும் இந்நாளிலிருந்து பதினைந்து நாள்களில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்னர், இது குறித்த விசாரணையில் இருவரும் உரிய விளக்கமளிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | பிறந்தநாளில் கமலின் உருவபொம்மை எரிப்பு... காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ