தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழை பெய்து வருதையொட்டி ஆய்வு செய்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்களடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்திய அவர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.
கடந்த 7.12.2024 அன்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 10.12.2024 அன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அது பின்னர் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கி தற்போது மன்னர் வளைகுடா பகுதியில் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதம் வாயிலாக அறிவிக்கப்பட்டதோடு 10.12.2024 அன்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து தகுந்த அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கன மற்றும் மிக கனமழை பெற வாய்ப்பு உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள்அனுப்பி வைக்கப்பட்டு, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், 12.12.2024 இரவு 8.30 மணி அளவில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி நிலைமையை கேட்டறிந்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும் படிக்க | அப்பா பேச்சை கேட்காத அனில் பிள்ளைதான் முக ஸ்டாலின் - எச் ராஜா விமர்சனம்!
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சராசரியாக, தென்காசியில் 16.3 செ.மீ., அரியலூரில் 15.9 செ.மீ. மயிலாடுதுறையில் 14.6 செ.மீ., திருநெல்வேலியில் 10.5 செ.மீ. தூத்துக்குடியில் 9.8 செ.மீ., கடலூரில் 9.5 செ.மீ., பெரம்பலூரில் 9.3 செ.மீ., விருதுநகரில் 7.3 செ.மீ., தஞ்சாவூரில் 7.2 செ.மீ., காஞ்சிபுரத்தில் 7.2 செ.மீ., திண்டுக்கல்லில் 6.7 செ.மீ., திருவாரூரில் 6.5 செ.மீ., செங்கல்பட்டில் 6.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழைப்பொழிவு திருநெல்வேலி, அரியலூர், கடலூர், தென்காசி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 20 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை 49 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. மேலும், 10 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை 139 இடங்களில் மிக கனமழையும், 6.5 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை 217 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
ஏரிகளில் உபரி நீர் திறப்பு
நேற்று முதல் பூண்டி, பிச்சாட்டூர் மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்களில் இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுடன் உபரி நீர் திறக்கப்பட்டது. இன்று (13.12.2024 செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சேத்தியார்தோப்பு ஏரிகளிலிருந்து உபரி நீர் திறப்பது குறித்து உரிய எச்சரிக்கை அளிக்கப்பட்ட பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று சிவப்பு அலர்ட் விடுத்தது. இதன் காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை ஏற்பட்டு, தாமிரபரணி ஆற்றில் 50,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
கனமழை : தமிழ்நாடு அரசின் நிவாரணம்
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிருவாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் வெள்ள அபாயம் குறித்து 11.75 இலட்சம் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அரியலூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து இருவரும், சிவகங்கை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி இருவரும் இறந்துள்ளனர். மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மொத்தம் 117 கால்நடைகள் இறந்துள்ளன. அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மொத்தம் 438 வீடுகள் சேதமடைந்துள்ளன. 50 நிவாரண முகாம்களில், 2034 நபர்கள் தங்க வைக்கப்பட்டு. அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை
அரியலூர், திருநெல்வேலி. தென்காசி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், மதுரை, திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, இராமநாதபுரம், சேலம், விருதுநகர், சிவகங்கை, தேனி, கரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட மற்றும் மாவட்ட கண்காணிப்பு காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்ட போது, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து. கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார். மேலும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க | பூண்டி ஏரியிலிருந்து 12,000 கன அடி உபநி நீர் வெளியேற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ