தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே மழை பொழிந்து வரும் நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது...
"தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. தற்போது குமரி மற்றும் உள்மாவட்டங்களில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீட்டர் மழையும் மதுராந்தகத்தில் 14 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது.
நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில்) தமிழகம் மற்றும் புதுவையில் மழையின் அளவு படிப்படியாக குறையும்" என தெரிவித்துள்ளார்.