தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று கூறியதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தேவையான அளவு மழை கிடைத்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு இந்த ஆண்டு மழை நிறைவாக பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.
தெற்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த இரு தினங்களுக்கு அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.