குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நேற்று 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த தனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் போன்ற போதைப்பொருட்கள் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மேலும் குட்கா மற்றும் பான்பராக் விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த சோதனையின்போது, ரகசிய டைரி ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அந்த டைரியில் குட்கா விற்பனையில் வரி ஏய்ப்பு செய்வதற்கு அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடந்தையாக செயல்பட்ட தகவல்கள் இருந்தன.
மத்திய கலால் வரித்துறை, தமிழக உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை, போலீஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ரூ.47 கோடி வரை மாமூல் கொடுக்கப்பட்டதாக ரகசிய டைரியில் தகவல் எழுதப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குட்கா ஊழல் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
இதேபோல் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, முன்னாள் காவல்துறை ஆணையர் வீடு உட்பட தமிழகத்தில் 40 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடைபெற்று வருகிறது. குட்கா ஊழல் தொடர்பாக இந்த தொடர் சோதனை நடைப்பெற்ற வருகிறது.