முல்லைபெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி...
முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசின் ஒப்புதலை பெறுவது உள்பட 7 நிபந்தனைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது.
சுமார் 123 ஆண்டு பழமையான ஆணை முல்லைப்பெரியாறு அணை. இந்த அணை உடைந்துவிட்டால், மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என தொடர்ந்து கூறி வரும் கேரள அரசு, தற்போதுள்ள அணைக்குப் பதிலாக, பீர்மேடு தாலுகா, மஞ்சமலைப் பகுதியில் புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை கேட்டுள்ளது. சுமார் 174 அடி உயரத்தில் புதிய அணையை கட்டுவதற்கான அனுமதி கோரியுள்ள கேரள அரசு, 82 அடி உயரத்தில் துணை அணை ஒன்றையும் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு ஒட்டுமொத்தமாக 663 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அனுமதி பெற்ற நான்கே ஆண்டுகளில் அணையை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அணை கட்டப்பட்ட பிறகு, முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் தேக்குவது நிறுத்தப்பட்டு, அந்த அணையை உடைத்து அகற்றவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு கீழே புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை 7 நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
அதில், 2 மாநிலங்களும் சேர்ந்தே அணை கட்டுவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதால், தமிழக அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகையான அனுமதி மற்றும் தடையில்லா சான்றுகளையும பெற வேண்டும் என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள ஆய்வு எல்லைகள் உச்சநீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகளுக்கு உட்பட்டவை என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், புதிய அணை கட்டுவதால், மூழ்கடிக்கக்கூடிய வனப் பகுதிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தாக்கல் செய்வதற்கு, தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபந்தனை விதித்துள்ளது.