18 MLAக்களுடன் ஆலோசனை நடத்தி மேல்முறையீடு: டிடிவி தினகரன்!!

எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி மேல்முறையீடு குறித்து முடிவெடுப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 25, 2018, 11:03 AM IST
18 MLAக்களுடன் ஆலோசனை நடத்தி மேல்முறையீடு: டிடிவி தினகரன்!! title=

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து விசாரணையை தொடங்கினார். மேலும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் .

இதையடுத்து இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். அப்போது, 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றும் தகுதிநீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி சத்தியநாராயணன் அளித்த தீர்ப்பை அடுத்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர்,

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து 18 பேருடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். இன்று மாலை குற்றாலம் சென்று 18 பேருடன் ஆலோசனை நடத்த உள்ளேன். எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி மேல்முறையீடு குறித்து முடிவெடுப்போம். எப்போது இடைத்தேர்தல் நடந்தால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள் என்று பேட்டி அளித்தார்.

 

 

Trending News