அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார் - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்

Latest Updates For Senthil Balaji Case:  அமைச்சர் செந்தில் பாலாஜயை கைது செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 27, 2023, 02:13 PM IST
  • காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை -மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ
  • சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யலாம் - அமலாக்கப் பிரிவு தரப்பு
  • வாதம் நிறைவடையாததால் விசாரணை 2:45க்கு தள்ளிவைப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார் - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் title=

தமிழ்நாடு செய்திகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரி அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க - செந்தில் பாலாஜியின் உடல் நிலை எப்படி உள்ளது? மா சுப்பிரமணியம் தகவல்!

இதையடுத்து அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை எனவும், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை எனவும், ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது எனவும் குறிப்பிட்டார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளதாகவும், கைது செய்யும் போது காரணங்களை கூற வேண்டும் என தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க - செந்தில் பாலாஜி மாட்டினால் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் - பொங்கிய ஜெயக்குமார்

உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார் என்றார்.

செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலிலும், அமலாக்க துறை காவலிலும் வைத்து விசாரிக்க அனுமதித்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இயந்திரத்தனமானதல்ல எனவும், அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் துஷார் மேத்தா வாதிட்டார்.

மேலும் படிக்க - செந்தில் பாலாஜியின் இன்றைய நிலைக்கு காரணம்... மது பிரியர்களின் சாபம் - கொந்தளித்த செல்லப்பாண்டியன்

காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலவில்லை எனவும், முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோராவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும் எனவும் தெரிவித்தார்.

கைதின் போது பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும், ஜாமீன் மனு தாக்கல் செய்ததன் மூலம் நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வாதம் நிறைவடையாததால் விசாரணை 2:45க்கு தள்ளிவைப்பு.

மேலும் படிக்க - சுனாமி, கொரோனா வந்தாலும் விசாரிக்க முடியாது... செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News