சிவகாசி: சிவகாசி அருகே குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியது. துப்புரவுப் பணிகளுக்குப் பிறகு நீரின் தரத்தை மதிப்பீடு செய்தவுடன், தண்ணீர்த் தொட்டியில் இருந்து நீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்துள்ள புதுக்கோட்டை ஊராட்சியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் நாயின் சடலம் நேற்று (பிப்ரவரி 7 திங்கள்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஒரு வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட இந்த நீர்த்தொட்டியில் இருந்து, சுமார் 250 வீடுகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும், ஐந்து மற்றும் 20ம் தேதிகளில் நீர்த்தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். வழக்கமான துப்புரவுப் பணியின்போது, நாயின் சடலம் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாயின் சடலம், மேல்நிலை நீர்த்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவுடன், புதுக்கோட்டை பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
மேலும் படிக்க: அதிமுக வேட்பாளரை முடிவு செய்வது யார்?
இந்த கிராமத்தில் நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன, இந்த குறிப்பிட்ட தொட்டியின் மூலம் சுமார் 250 வீடுகள் உள்ள ஆறு தெருக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
பொதுவாக, துப்புரவு பணிக்கு முந்தைய நாளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும், அங்குள்ள மக்களுக்கு நீர் விநியோகத்திற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படும். வழக்கப்படி ஐந்தாம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யப்பட வேண்டிய மேல்நிலை நீர்த்தொட்டி, துப்புரவுப் பணியாளர்கள் யாரும் இல்லாததால், அது மறுநாள் செய்யப்பட்டது.
மேல்நிலை தொட்டிக்கு அருகில் சென்றதுமே துர்நாற்றம் வீசியதால், தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தபோது, நாயின் சடலம் கிடந்தது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலம் உடனடியாக அகற்றப்பட்டது. பின்னர், பஞ்சாயத்து சார்பில் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தலில் ஒற்றை அணியாக திமுகவை எதிர்ப்போம்!
நாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டத் தொட்டியில், தற்போது பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யும் பணி முடிவடைந்தது. பஞ்சாயத்து சார்பில் செய்யப்பட்ட இந்த பணியில் வாட்டர் ப்ரூஃப் பெயின்டிங் செய்யும் பணியும் நடந்து வருகிறது. குடியிருப்பு வாசிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
துப்புரவுப் பணிகளுக்குப் பிறகு நீரின் தரத்தை மதிப்பீடு செய்தவுடன் தொட்டியில் இருந்து நீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எம்.புதுப்பட்டி கிராமத்தின் நடுவில் உள்ள தொட்டியில் சடலத்தை போடப்பட்டதன் பின்னணியில் அப்பகுதியை சேர்ந்த சமூக விரோதிகளின் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னதாக, குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் அந்த சம்பவம் அரங்கேறியது. ஆதிதிராவிட மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத சிலர் அசுத்தம் செய்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மேல்நிலை நீர்த்தொட்டியில் நாயில் சடலம் கிடந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Food Poisoning: ஹாஸ்டல் மெஸ் உணவில் விபரீதம்! 137 மாணவர்கள் மருத்துவமனையில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ