தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
கடந்த மாதம் தலைவர் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் திமுக சார்பில் ஜனவரி 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
முன்னதாக அவர் கூறியதாவது:-
இந்த நிலையில் இந்த ஆண்டிலாவது ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழகத்தில் நடத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டுமென்றும், ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அலங்காநல்லூரில் அடுத்த மாதம் ஜனவரி 3-ம் தேதி காலை 10 மணியளவில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், பொது அமைப்புகளைச் சார்ந்தோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகளும் என்னுடைய தலைமையிலே நடைபெறும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியிருந்தார்.
நேற்று இரவே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்து விட்டார். இன்று காலை அவர் அலங்காநல்லூர் வந்தார். இதில் திமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பொங்கல் பண்டிகையன்று நடத்த அனுமதி தர வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. அதிமுக -விற்கு திராணியில்லை திமுக ஆட்சி காலத்தில்தான் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை கொண்ட ஆளுங்கட்சியாக அதிமுக உள்ளது. அவர்களுக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திராணியில்லை என அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டு நடத்தும் வாய்ப்பு வந்து விட்டால் தடையை மீற வேண்டிய சூழ்நிலை வராது - தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி https://t.co/xb7SU936Hv
— DMK Party official (@arivalayam) January 3, 2017
தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தமிழகத்தின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்ற தடையுத்தரவால் நடத்தப்படவில்லை.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு அவசர ஆணை பிறப்பித்தது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கக் கூடாது என்று விலங்குகள் நல வாரியத்தின் சார்பில்தெரிவிக்கப்பட்டது. இதனால் உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார்.