தமிழகத்தில் 18 தொகுதிகளோடு விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
பின்னர் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று நடைப்பெற்ற திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியா நிலையில், தமிழகத்தில் 18 தொகுதிகளோடு விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது.