தமிழகத்தை பொறுத்தவரை வரும் மக்களவை தேர்தலையொட்டி கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் உள்ளது. ஒருபுறத்தில் ஆளும் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணி பேச்சுவாரத்தை, மறுபுறத்தில் எதிர்க்கட்சி தலைமையிலான கூட்டணி பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களை குறித்து அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
வரும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதில் இறுதி முடிவாகி உள்ளது. திமுக கூட்டணியில் மொத்தம் எட்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் மதிமுக, விசிக, கொங்குநாடு, முஸ்லிம் லீக், ஐஜேகே போன்ற கட்சிகள் திமுக முத்திரையான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என தெரிகிறது. அதுக்குறித்து ஓரிரு தினங்களில் முடிவாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகள் உள்ளன.
கட்சியின் பெயர் | இடங்கள் |
திராவிட முன்னேற்றக் கழகம் | 20 |
இந்திய தேசிய காங்கிரஸ் | 10 |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | 2 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 2 |
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | 2 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 1 |
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | 1 |
இந்தியா ஜனநாயக கட்சி | 1 |
கொங்குநாடு முன்னேற்ற கழகம் | 1 |
கடந்த 2014 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது. ஒரு இடத்தில் பாஜகவும், மற்றொரு இடத்தில் பாமகவும் வெற்றி பெற்றது. 1991 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தமிழகத்தில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் ஒரு மக்களவை பிரதிநிதியும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.