இன்று மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்டு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2, விடுதலை சிறுத்தைகள் 2, மதிமுக 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, ஐ.ஜே.க. 1 என்ற அடிப்படையில் அந்தந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் அறிவிக்கப்பட்டது.
திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகும்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவித்துள்ளோம். அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 17 ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. அடுத்த வாரத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறினார்.