திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் டெங்கு ஒழிய புதிய கருத்துக்களையும், தான் இதுவரை செய்த பணிகளை பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளது.
எனது கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். கவுதமபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் பழுது பார்க்கும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தேன்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் இருந்து நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, வார்டு எண் 68க்கு உட்பட்ட கோபாலபுரம் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி மற்றும் வார்டு எண் 65க்கு உட்பட்ட சீனிவாசா நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நேரில் பார்வையிட்டு, பள்ளி மாணவ – மாணவியர் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தேன்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், சீனிவாசா நகரில் உள்ள லோகோ ஸ்கீம் 2வது தெருவில் தேங்கியிருந்த குப்பைகளை கண்டவுடன் கழக தோழர்களுடன் சென்று அகற்றினேன்.
அதேபோல, ஜவகர் வீதி மற்றும் வில்லிவாக்கம் ரயில்வே இருப்புப்பாதை ஆகிய பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டேன்.
அதேபோல், பெரியார் அரசு மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து,ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை சரியானதாக உள்ளதா என்பது குறித்துக் கேட்டறிந்தேன்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்படாமல், பணிகள் முடங்கி, அதன் காரணமாக டெங்கு போன்ற நோய்கள் தமிழகம் முழுவதும் பரவுகின்றன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடும் முயற்சியில் மட்டுமே ‘குதிரை பேர’ அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டேன்.
அதுமட்டுமின்றி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்து வருவதையும், நிலவேம்பு குடிநீர் வழங்குவதையும், ஆனால் முதலமைச்சரும், அமைச்சர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமென்றால் எடப்பாடி தலைமையிலான டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும் என்று உறுதிபட தெரிவித்தேன்.
என்று தெரிவித்துள்ளார்.