அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
மக்களவை தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது எனவும் சுயேட்சை சின்னம் தான் ஒதுக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குக்கர் சின்னத்தை மீண்டும் ஒதுக்குவதில் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பினர். இவ்வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்தனர்.