நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரம் அமுதவள்ளி தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வங்கி அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.