சென்னை- சேலம் இடையே அமையவுள்ள பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய திருத்தங்களைச் செய்து அறிகை வெளியிட்டுள்ளது..!
சென்னை- சேலம் இடையே 277 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் பாரத்மாலா பர்யோஜனா திட்டத்தின் கீழ் அமைய உள்ள இந்த சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டபோது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இத்திட்டத்திற்கான மதிப்பீடு 10 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 210 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கல்வராயன் மலையைப் பாதிக்காதவாறு செங்கம்-சேலம் சாலை வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் திட்டமிடப்பட்ட 300 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 103 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது. வனப் பகுதியில் 13 புள்ளி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த தூரம் 9 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. பசுமை வழிச் சாலை 90 மீட்டர் அகலத்தில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது, தற்போது 70 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. வனப் பகுதியில் இதன் அகலம் 70 மீட்டரில் இருந்து 50 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. வனப் பகுதியில் அணுகுசாலை அமைக்கவிருந்த திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.