நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டுமாய், அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டதையடுத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன். சென்னை தி.நகரில் வைத்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக, பாஜக இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை எனவும், பாஜக மாநில தலைவர் இல்லாத காரணத்தினால் அகில இந்திய தலைமையிடம்தான் பேச முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழகத்திற்கான பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். அதேப்போல், சென்னை IIT நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி ஆதரவு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளுக்கு இம்மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உள்பட 23 வேட்பாளர்கள் நாங்குநேரி தொகுதியிலும், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக + அதன் கூட்டணி கட்சியும், அதேபோல திமுக + அதன் கூட்டணி கட்சியும் போட்டியிடுகிறது. இந்த இரண்டு கட்சியை தவிர நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. இடைத்தேர்தலில் தங்கள் பலத்தை நிருப்பிக்க திமுக மற்றும் அதிமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட தயாராகி வருகிறது.