முதல்வர் பிறந்தநாளில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... முழு விவரம்!

Bomb Threat In Tamil Nadu Secretariat: சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு செல்போன் மூலம் இன்று காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, மிரட்டல் விடுத்தவரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Mar 1, 2024, 11:35 AM IST
  • தலைமை செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
  • செல்போன் அழைப்பு காலை 7.30 மணிக்கு வந்துள்ளது.
  • முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பிறந்தநாளில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... முழு விவரம்! title=

Bomb Threat In Tamil Nadu Secretariat: சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் அழைப்பால் தலைமை செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இன்று காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் வந்துள்ளது.  மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. 

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் என கண்டறியப்பட்டது. தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சென்னை வானகரத்தில் உள்ள தமிழ் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றவர் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்று சில நாள்களுக்கு முன்னால், சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கும் திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த பிப். 8ஆம் தேதி அன்று அண்ணா நகர், பாரிமுனை, ஜெ.ஜெ.நகர், கோபாலபுரம், ஆர்.ஏ.புரம் என சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இதுதொடர்பாக, 9 காவல் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த 13 பள்ளிகளுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரி மூலம் மிரட்டல் செய்தி வந்துள்ளது, அந்த மின்னஞ்சல் முகவரி வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரில் இருந்ததாகவும் கூறப்பட்டது. 

மேலும் படிக்க | கூட்டணிக்கு தவம் கிடக்கும் பாஜக... ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்!

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மின்னஞ்சல் எந்த IP Address கொண்ட கணினியில், எந்த பகுதியில் இருந்து வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இன்டர்போலின் உதவியை நாட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று அவரது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தி வந்தார். தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள பெரிய திடலுக்கும் சென்று மரியாதை செலுத்தினார். 

குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, அவரது X பக்கத்தில் தனது வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்," தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும்" என தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார். மேலும், இன்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பிறந்தநாளும் என்பதால் பிரதமர் மோடி முன்னதாக அவருக்கு வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார். 

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபரலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாழ்த்துகளை X பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,"தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது சாந்தன் உடல்! வேதனை விடை கொடுத்த தமிழர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News