பாஜகவை சுற்றி வட்டமடித்த பாலியல் புகார்கள்; மடைமாற்ற சர்ச்சை கருத்தை பேசினாரா ஆளுநர்?

தமிழக பாஜகவை சுற்றி கடந்த சில வாரங்களாக பாலியல் புகார்கள் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை மடைமாற்ற ’தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த சர்ச்சைக் கருத்தை ஆளுநர் பேசினாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 7, 2023, 08:25 PM IST
பாஜகவை சுற்றி வட்டமடித்த பாலியல் புகார்கள்; மடைமாற்ற சர்ச்சை கருத்தை பேசினாரா ஆளுநர்? title=

தமிழக பாஜகவைச் சுற்றி அண்மைக்காலமாக பாலியல் புகார்கள் கடுமையாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. இது தமிழக பாஜகவின் உட்கட்சி விவகாரம் என்றாலும், அதனை பொதுவெளியில் அக்கட்சியில் இருந்தவர்களே பேசத் தொடங்கியது தான் அரசியல் களத்தில் சர்ச்சையாக உருவெடுத்தது. கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைவர்கள் ஹனி டிராப் மூலம் குறி வைக்கப்படுகிறார்கள் என்றும், அதில் சிக்காதவர்கள் வேறு மாதிரியான சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என அக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் வெளிப்படையாக பொதுவெளியில் குமுறத் தொடங்கினர். இதற்கு பின்னணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருப்பதாகவும், தனக்கு நிகராக யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படியான மோசமான செயல்களில் ஈடுபடுவதாக அக்கட்சியில் இருந்து வெளியேறிய காயத்திரி ரகுராம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தெரிவித்திருக்கும் காயத்திரி ரகுராம், இது குறித்து வெளிப்படையான உட்கட்சி விசாரணை வைக்க வேண்டும் என கேட்டும் அதற்கு மாநில தலைமையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறினார். தன்னுடைய தரப்பில் எந்தவொரு விளக்கத்தையும் கேட்காமல், தொடர்ந்து கட்சிக்குள் அவமதிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்திருக்கும் காயத்திரி ரகுராம், இது தொடர்பாக அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு கூட மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கவில்லை என கூறியிருந்தார்.

மேலும் படிக்க | ஆளுநருக்கு பொழுதுபோகவில்லை போல - சீமான் விமர்சனம்

இதுஒருபுறம் இருக்க டெய்சி, அலிஷா அப்துல்லா, சூர்யா சிவா ஆகியோர் தொடர்பான சர்ச்சைக் கருத்துகளும் தமிழக பாஜகவுக்கு தலைவலியாக மாறியது. குறிப்பாக டெய்சி - சூர்யா சிவா இடையிலான ஆபாச உரையாடல் ஆடியோ வெளியாகி அக்கட்சிக்கு பொதுவெளியில் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது. இதுதொடர்பாக இருவரும் பின்னர் பேசி கைக்குலுக்கி கொண்டதாக பேட்டியளித்தாலும், பாஜகவில் இருந்து விலகிய பின்னர் தொடர்ந்து அந்த சர்ச்சை ஆடியோ குறித்து பேசி வருகிறார் சூர்யா சிவா. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் இந்த சூழலில் தமிழக பாஜகவின் இந்த பாலியல் ஆடியோ வீடியோ சர்ச்சை கட்சிக்கு பொதுவெளியில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது மேலிடத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளதாம். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தமிழக பாஜக குறித்து இப்படியான கருத்துகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகட்டிவ் அபிமானத்தை உருவாக்கியிருக்கும் சூழலில், அதனை சரிசெய்ய என்ன செய்யலாம் என தாமரை மேலிடம் யோசித்திருக்கிறது. இந்த நேரத்தில் தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதை தமிழகம் என அழைக்கலாம் என்ற சர்ச்சைக் கருத்தை கூறியது தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

பாஜகவின் பாலியல் புகார்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த சோஷியல் மீடியாவில் ’தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் வைரலாகத் தொடங்கியது. அனைவரும் தமிழ்நாடு குறித்த விவாதங்களிலும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் குறித்தும் பேச தொடங்கிவிட்டனர். இதன் மூலம் தமிழக பாஜக மீது இருந்த இமேஜை நொடியில் மடைமாற்றுவதற்காக ஆளுநர் ரவி இப்படியொரு கருத்தை தெரிவித்து, சித்தாந்த அரசியலுக்கு மடைமாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 'தமிழ்நாடு' பெயரில் இவர்களுக்கு என்ன பிரச்னை...? - ஆளுநர் மீது அமைச்சர் அட்டாக்!

அதேநேரத்தில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் என நாடு என்ற பொருளுடன் இந்த மாநிலங்கள் இருக்கையில் தமிழ்நாட்டை மட்டும் ஏன் தமிழகம் என அழைக்க வேண்டும்? என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார் என்ற கேள்வியை முன்வைத்துள்ள அரசியல் விமர்சகர்கள், தமிழ்நாடு என்ற பெயர் வைக்கப்பட்டது முதலே அந்த பெயரை மாற்ற வேண்டும் என்ற சித்தாந்த எண்ணத்துடன் அவர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்போது திராவிட மாடல் என்ற அரசியலுக்கு எதிராக இப்படியொரு பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால், அதனை பாஜக என்ற அரசியல் கட்சி சொல்லலாம், செய்யலாம்... ஆளுநர் பதவியில் இருப்பவர் எப்படி பேசலாம்? என்றும் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News