சென்னை: தமிழகத்திற்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகிவிட்டது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் ஏழு குற்றவாளிகளை விடுவிக்கும் கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வரும் ஒன்றாகும்.
அதிலும், ஆளும் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் எம்.கே.ஸ்டாலினுக்கு ராஜீவ் காந்தி வழக்கின் ஏழு குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
Also Read | தவறு செய்தால் பதவி நீக்கம்: தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
”தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்”.
”அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது”.
”உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்”.
”இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்போடு வேண்டுகிறேன்”, என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Also Read | தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடி நடவடிக்கை வேண்டும்- ஐகோர்ட்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதிதாக பதவியேற்றிருக்கும் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினுக்கு விடுத்திருக்கும் கோரிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது”.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தற்கொலை வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அந்தத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு வைத்திருந்த அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
30 ஆண்டுகளுக்கு பிறகு, அண்மையில் நடைபெற்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக இந்தக் கோரிக்கையை எப்படி கையாளும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR