அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: சொல்லி அடித்த அபிசித்தர்... முதல் பரிசை தட்டித்தூக்கினார் - முழு விவரம்

Alanganallur Jallikattu 2025: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகளை அள்ளிய சிறந்த காளைகள் மற்றும் சிறந்த வீரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 16, 2025, 08:51 PM IST
  • 1000 காளைகள் இன்று களமிறக்கப்பட்டன.
  • 71 பேர் மொத்தம் காயமடைந்தனர்.
  • பார்வையாளர்கள் இன்று அதிகமாக காயமடைந்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: சொல்லி அடித்த அபிசித்தர்... முதல் பரிசை தட்டித்தூக்கினார் - முழு விவரம் title=

Alanganallur Jallikattu 2025, Prizes And Results: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, ஜல்லிக்கட்டும் மக்களின் நினைவுக்கு வந்துவிடும். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பல பாரம்பரிய விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாலும் அதில் ஜல்லிக்கட்டுக்கு தனி மதிப்பு உண்டு என்பதை மறுக்க இயலாது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதிக்கப்பட்டபோது 2017ஆம் ஆண்டில் தமிழகமே வெகுண்டெழுந்ததை இன்றும் மறக்க இயலாது. 

அப்படியிருக்க இந்தாண்டும் மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினமும் (ஜன. 14), பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்றும் (ஜன. 15) நடந்து முடிந்தன. அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.50 மணிக்கு தொடங்கியது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: களமிறங்கிய 1000 காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் இன்று களம் கண்டன.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஹைகோர்ட் முக்கிய உத்தரவு! திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: அயர்லாந்து நாட்டு வீரர் தகுதி நீக்கம்

காளைகளை போல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை அலங்காநல்லூர்ஆரம்ப சுகாதார மையத்தில்  நடைபெற்றது. இன்றைய போட்டியில் பங்கேற்க 545 வீரர்கள் வந்திருந்த நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் மது அருந்தியது, உடல் தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் 55 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதிலும் குறிப்பாக, வயது மூப்பு காரணமாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: 76 பேர் காயம்

மொத்தம் 490 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 10 சுற்றுகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. நேரமின்மை காரணத்தால் 8 சுற்றுக்களோடு போட்டி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 400 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

காலையில் இருந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில், மாடுபிடி வீரர்கள் இறுதிச்சுற்றில் பங்கேற்ற அஜய், தமிழ்ச்செல்வன் உட்பட 22 பேர், மாட்டு உரிமையாளர்கள் 21 பேர், பார்வையாளர்களில் கல்லூரி மாணவி உட்பட  33 பேர் என மொத்தம் 76 பேர் காயமடைந்தனர். 17 பேர் பலத்த காயமடைந்தனர். 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: ஒருவர் பலி

இதில் காளை சேகரிக்கும் இடத்தில் வேடிக்கை பார்க்க வந்த தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த செல்வ முருகன், அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவனியாபுரம், பாலமேடு, ஜல்லிக்கட்டு போட்டியை விட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்கள் அதிகமானோர் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கூலி தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்..! சொந்த தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு வழங்கும் கடனுதவி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: சிறந்த காளைகல் - பரிசுகள்

இறுதிச்சுற்றோடு சேர்த்து மொத்தம் 9 சுற்றுகள் நடத்தப்பட்டது. மொத்தம் 1000 காளைகள் அவிழ்க்கப்பட்டன. அதில் சேலத்தை சேர்ந்த பாகுபலி காளை, சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்றது. அந்த காளையின் உரிமையாளருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கன்று உடன் கூடிய நாட்டு பசுவும் வழங்கப்பட்டது. 

வக்கீல் பார்த்தசாரதியின் காளை இரண்டாம் பரிசை தட்டிச்சென்றது. அவருக்கு மோட்டார் பைக், விவசாய ரோட்டைவிட்டர் கருவி ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கண்ணன் என்பவரது காளைக்கு 3வது பரிசாக எலெக்ட்ரிக் பைக் மற்றும் இலங்கை செந்தில் தொண்டமான் காளைக்கு 4வது பரிசாக மோட்டார் பைக்கும் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: சிறந்த மாடுபிடி வீரர்கள் - பரிசுகள்

அதேபோல், சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை 20 காளைகளை பிடித்த அபி சித்தர் வென்றார். இவருக்கு  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், நாட்டு பசு மற்றும் கன்று பரிசாக வழங்கப்பட்டது. 

13 காளைகளை அடக்கிய ஸ்ரீதர் 2வது பரிசை பெற்று, ஷேர் ஆட்டோ வாகனத்தையும், 10 காளைகளை அடக்கி விக்னேஷ் என்பவர் 3வது பரிசாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கையும் வென்றனர். 4வது பரிசாக 9 காளையை பிடித்த அஜய் என்பவருக்கு டிவிஎஸ் XL வழங்கப்பட்டது. அத்தனை பரிசுகளையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

இந்த வருடமும் கலக்கிய அபிசித்தர்

இதில் அபிசித்தர் கடந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசையே வென்றார். 18 காளைகளை அடக்கிய கார்த்திக் என்பவருக்கே முதல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது, தன் மீது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி பாரபட்சம் காட்டுவதாகவும், அதனால்தான் முதல் பரிசை இழந்ததாகவும் அபிசித்தர் கடந்தாண்டு குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரியில் கீழக்கரையில் புதிதாக தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 10 காளைகளை அடக்கி, முதல் பரிசாக மஹிந்திரா தார் என்ற காரை அபிசித்தர் வென்றது குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025: ஆதிக்கம் செலுத்திய காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியினை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து காளைக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், டிவி, சைக்கிள், பணம், சேர், உள்ளிட்ட ஏராளமான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது.

போட்டியில் அதிகளவிற்கு பெண்கள் மற்றும் திருநங்கைகளால் வளர்க்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட நிலையில் அதில் சில காளைகள் வெற்றிபெற்று பரிசுகளை தட்டிசென்றது. இதேபோன்று காவல்துறையினர் சார்பில் அவிழ்க்கப்பட்ட காளைகளும் பரிசுகளை தட்டிசென்றது. இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளே அதிகளவிற்கு வெற்றிபெற்று பரிசுகளை தட்டிசென்றன.

மேலும் படிக்க | அடுத்த தேர்தல்! ஜெயலலிதா பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News