தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற எந்தவித வழியும் இல்லை. அவர்களுக்கு அதிமுக எப்போதும் உதவி செய்யாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இன்று எம்.ஜி.ஆர். 102 பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் கலந்துக்கொள்ள கோவை மாவட்டம் வந்த தம்பிதுரை, செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம் கோடநாடு விவகாரம், நாடாளுமன்ற கூட்டணி, திமுக, பாஜக, காங்கிரஸ் உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தமிழகத்தில் பாஜக-வை காலூன்ற வைக்கவே, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற எந்தவித வழியும் இல்லை. அவர்களுக்கு அதிமுக எப்போதும் உதவி செய்யாது. அவர்களுக்கு உதவி செய்ய அதிமுக என்ன பாவமா செய்தது எனக் கூறினார். மற்ற கட்சியை வளர்ப்பதில் எங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லை.
மத்தியில் ஆட்சி செய்து வரும் பஜகவுடம், அதிமுக நட்புடன் தான் இருக்கிறது. அதற்காக மத்திய அரசு கொண்டு வரும் எல்லா திட்டத்தையும் ஆதரிக்காது என்று தம்பிதுரை தெளிவாக கூறினார்.
கோடநாடு விவகாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை. தேர்தல் ஆதாயத்திற்காக எதிர்கட்சிகள் திட்டமிட்டு பொய்களை பரப்புகின்றன. ஆனால் அதிமுக-வை அவர்கள ஒன்றும் செய்யமுடியாது.