’மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன்?’ என்று முதல்வர் பழனிசாமி கேள்வி!!
மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்வி குழுவின் வரைவில், மும்மொழி கொள்கை பிரிவில், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மொழி கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு, கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து பலவேறு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறுகையில்; ’ மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன்?, பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுதான் ட்வீட் செய்திருந்தேன். தமிழை பிறமாநிலங்களில் பயிற்றுவிக்க வேண்டும் என்றுதான் ட்விட்டரில் பதிவிட்டேன். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றியே அதிமுக ஆட்சி நடைபெறும். மும்மொழிக் கொள்கையை நான் ஆதரிப்பதாக அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பரப்புகிறார்கள்’ என்று பேட்டியளித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், ‘காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கர்நாடக அரசை ராகுல்காந்தி வலியுறுத்தாதது ஏன்?. தமிழகத்திற்கு நீர் திறக்க திமுக எம்பிக்கள் கர்நாடக அரசை வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன். நளினியை தவிர 6 பேரையும் விடுவிக்கக்கூடாது என கூறிய திமுகவிற்கு கேள்வி கேட்க உரிமையில்லை’ என்றார். அதிமுகவிற்கு வருபவர்களை இணைக்க நானும் OPS-ம் இணைந்தே செயல்படுகிறோம் என்ற முதல்வர், அமமுகவில் இருந்து பெரும்பாலானவர்கள் விலகி விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், முழுமையாக மழைப்பொழிவு இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், குடிநீர் பிரச்னையை தீர்ப்பது பற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.