அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒரு லிட்டர் பால் ரூ.25-க்கு தரப்படும் என்று உறுதியளித்து இருந்தது. இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா தலைமையிலான அரசு பால்விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒரு அரசாகவே செயல் பட்டுகொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒரு லிட்டர் பால் ரூ.25-க்கு தரப்படும் என்று உறுதியளித்த நிலையில், அதற்கான எந்த ஆக்கப்பூர்வமான செயலிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்று, வெற்றி பெற்ற பிறகு அரசு நடந்து கொள்வது வேறு. அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தாலும், காட்சிகள் மாறியதாக தெரியவில்லை. எனவே இந்த அரசு பால் விலையை, தேர்தல் அறிக்கையில் கூறியது போல் ஒரு லிட்டர் பால் ரூ.25-க்கு இந்த அரசு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஹெரிடேஜ் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற செய்ய வேண்டும். இந்த அரசை நம்பி வாக்களித்த மக்களுக்கு, வாக்குறுதிகளை காப்பாற்றும் அரசாக செயல்பட வேண்டும். பால் அனைத்து குடும்பங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.