ஒரே ‘பைக்கில்’ 7 பேர் பயணம்!

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒரே பைக்கில் வந்த இளைஞர்கள்  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 6, 2022, 04:16 PM IST
  • ஒரே பைக்கில் 7 இளைஞர்கள் பயணம்
  • ஜல்லிக்கட்டுப் பார்ப்பதற்குச் சென்ற போது சாலையில் சாகசம்
  • ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சாலையில் பயணம்
ஒரே ‘பைக்கில்’ 7 பேர் பயணம்!  title=

மனிதன் நிர்வாணமாகத் திரிந்த ஆதிக் காலத்தில் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான உணவு, இருப்பிடம், காமம் என சகலமும் கிடைத்திருக்கும். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அடிப்படைத் தேவைகளான இந்த மூன்றும் வெகு இயல்பாக கிடைக்கும் அளவுக்கு, ஒருமாதிரியான சமநிலைக்கு மனிதன் நிச்சயம் வந்துசேர்ந்திருப்பான் என யூகிக்க முடிகிறது. ‘உணவு, உறக்கம் ; உணவு உறக்கம் ; உணவு உறக்கம்’ என்ற காலச்சக்கரத்தில் சுழன்றுகொண்டிருந்த மனிதனுக்கு ஏதோவொரு இடத்தில் ‘போர்’ அடித்திருக்கிறது. விளைவு. பாறைகள் உருண்டோடுவதைப் பார்த்து சக்கரத்தைக் கண்டுபிடித்து விலங்குகளை அடக்கி வாகனத்தையே உருவாக்கிவிட்டான் மனிதன். வெறுமனே அமர்ந்திருந்த மனிதனுக்கு உருண்டோடிய பாறைகள் ஒருவிதமான சாகச மனநிலையை உருவாக்கியிருக்க வேண்டும். வெறுமனே ‘போர்’ அடிப்பதாக அமர்ந்த மனிதனுக்கு வாகனம் கிடைத்திருக்கிறது. ஆகவே ‘டைம் பாஸ்’ என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதுதான் உலக இயங்கியலின் ஆதாரம் என்பது இந்த கற்பனை வரலாற்று யூகத்தில் இருந்து உணரமுடிகிறது அல்லவா!.

மேலும் படிக்க | சென்னை புறநகரில் ரேஸில் ஈடுபட்ட லாரிகள் - நடந்தது என்ன ?

வாகனம் என்பதே மனிதனின் சாகத்துக்கான குறியீடாகத்தான் பார்க்கப்படுகிறது. 90களின் பெண்களுக்கு வரலாற்று ரீதியாக இருசக்கர வாகனம் விடுதலைக்கான குறியீடாக இருந்தது. சுதந்திரத்துக்கான கருவியாக இருந்தது. இந்த சாகசம் மற்றும் விடுதலை உணர்வு அரசியல் உரிமை சார்ந்து வருபவை. ஆனால், மனித மனத்தின் ஆழ்மனதில் உள்ள சாகச உணர்வு வெறும் வாகனங்களோடு நின்றுவிடவில்லை. எல்லாவற்றிலும் மனித மனத்துக்கு சாகசம் வேண்டும் அல்லது அதை மனிதன் உருவாக்குகிறான். அதன் பாதிப்பு மற்றும் விளைவுகள் எல்லாம் பின்னால் ‘எடிட்’ செய்து ஒரு சட்டத்துக்குள் அதே மனித இனம் கொண்டு வருபவை. ஆனாலும், அடி ஆழ் மனதில் இருக்கும் ஆதி மனிதனின் ‘அந்த சாகச’ உணர்வின் நீட்சி இன்னும் இருக்கத்தானே செய்யும்.!

நாகரிக சமூகத்தில் இந்த சாகசம், எந்தளவுக்கு மனிதனுக்கு பரவசத்தை அளிக்கிறதோ, அதே அளவுக்கு மனிதனை விழுங்கவும் செய்கிறது. சாகசத்தில் ஈடுபடுபவனை மட்டுமல்லாமல் சக உயிர்களையும்!. யதார்த்த சமூகத்தில் மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இந்த சாகச உணர்வு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சிக்கலாக மாறுகிறது ? அதன் உளவியல் பிரச்சனைகள் என்ன ?!. இந்தக் கேள்விகளுடன் ‘சாகசம்’ என்ற நூலை நேராக இழுத்துக்கொண்டு கொஞ்சம் சிவகங்கை பக்கம் செல்வோம். சிவகங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு இளைஞர்கள் ஆரவாரத்துடன் செல்கின்றனர். எப்படி ? ஒரே பைக்கில் 7 பேர். நம்ப முடிகிறதா? இதோ அந்த வீடியோ.! 

மேலும் படிக்க | 30 அடி உயர மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்!

ஒரு பைக்கில் அதிகபட்சம் 3 பேர் செல்ல முடியும். அதுவே சட்டப்படி குற்றம். 2 பேர் மட்டுமே செல்லக்கூடிய பைக்கில் 7 பேர் சென்ற இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பைக்கில் இளைஞர்கள் மட்டும் இப்படிச் செல்கிறார்கள் என்று சுருக்கிவிட முடியாது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேர் பரபரக்கும் சாலைகளில் ஒரே பைக்கில் செல்லும் காட்சிகளை கண்டிருக்கிறோம். அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தாண்டி ஷேர் ஆட்டோக்கள், மினி வேன்கள், தனியார் பேருந்துகள் என பட்டியல் நீளும் அளவிற்கு பயணங்கள் தொடர்கிறது. இதனால் எத்தனை உயிரிழப்புகள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் இந்தியாவிலேயே அதிகளவிலான விபத்துகள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமளிப்பதாக தமிழக சட்டப்பேரவையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்சனை நீள்கிறது. 

மேலும் படிக்க | பைக்கில் உலக உலா : அஜித்தின் திட்டம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் விபத்துகள் நடக்கிறது என்பது உண்மையெனினும், அதைத் தாண்டியும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் இதுபோன்ற சாகச மனநிலையும் பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ‘குடி’ என்பது, நாம் மேலே பேசிய ‘சாகச’ மனநிலையை மனதின் அடி ஆழத்தில் இருந்து உருவி எடுத்துக்கொண்டு வருகிறது என்றுகூட சொல்லலாம். பேருந்து, லாரிகளுக்கு இடையிலான போட்டிகள், அரசுப் பேருந்து Vs தனியார் பேருந்து ஈகோ மோதல்கள் என நாள்தோறும் தேசிய நெடுஞ்சாலை இரவுகளில் அரங்கேறி வருகின்றன. இதனால், எத்தனை குடும்பங்கள் பலியாகி வருகின்றன. தன்னை முந்திப்போகிற வாகனத்தை அடுத்த சிறிது நேரத்தில் முந்தியே ஆக வேண்டும் என்ற உந்துதலை அடையும் வாகன ஓட்டுநரின் சாகச மனநிலையே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாள்தோறும் இளைஞர்களின் விநோதமான இதுபோன்ற சாகச வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் ‘அப்பாவி’ பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். அந்த அப்பாவிகளுக்கும் அதே ஆதி சாகச உணர்வு இருக்கத்தானே செய்யும். ‘அதை’ வெடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நாகரிமடைந்த ஜனநாயகப் பூர்வ மனிதர்களின் கடமையல்லவா ?! 

மேலும் படிக்க | ‘அன்புள்ள சத்குருவுக்கு.!’ - சோனியா காந்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News