29c-ம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்.!

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி விழாவில் தனது பால்ய கால நினைவுகளை பகிர்ந்துகொண்டு நெகிழ்ச்சி ஏற்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 26, 2022, 03:31 PM IST
  • போஸ்டர் ஒட்டியதற்காக காவல்நிலையம் சென்ற மு.க.ஸ்டாலின்
  • 29C பேருந்தில் மு.க.ஸ்டாலினின் அனுபவங்கள்
  • பால்ய கால நினைவுகளை பகிர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
29c-ம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்.! title=

வெறும் போக்குவரத்துச் சாதனம்தான் என்று எந்தவொரு வாகனத்தையும் சொல்லவிடமுடியாது. மனித வாழ்வில் ஒரு ரயிலோ, பேருந்தோ, இருச்சக்கர வாகனமோ, காரோ எத்தனையோ நினைவுகளைச் சுமந்து செல்கின்றன. காலம் கடந்தாலும், அதன் நினைவுகள் எப்போதும் மனிதர்களை வசீகரிக்க கூடியவை. வாழ்வைத் திரும்பிப் பார்ப்பதில் மனித மனங்களுக்கு ரொம்ப இஷ்டம்போல.!

பயணங்களில் நட்பையும், காதலையும் உருவாக்கிய கதைகள் எத்தனையோ உண்டு. பக்கத்து இருக்கைகளில் அமரும் பயணியின் முகத்தைக் கூட பார்க்க முடியாத ஒரு பரபரப்பு வாழ்க்கைக்குள் ஹெட்செட்டும், செல்போனும் நம்மை விழுங்கிவிடுகின்றன. ஆனால், சென்ற தலைமுறையினர் பயணங்களில் நிகழ்ந்த அத்தனையையும் நினைவில் வைத்துச் சொல்கிறார்கள். பால்ய காலங்களைச் சொல்வதும், பேசுவதும் மகிழ்ச்சிதானே. அதுவும், தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், தனது பால்ய கால நினைவுகளை, அவரே பேசியிருப்பது புன்முறுவலை வரவைத்துள்ளது.

மேலும் படிக்க | 5 வருட சாதனை ஒரே ஆண்டில்..என்ன செய்தது திமுக.?

அது, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75வது ஆண்டு விழா. சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாணவியர்கள் முன்பு மு.க.ஸ்டாலின் தனது கடந்த கால நினைவுகளை பரிமாறினார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என்று நெருக்கடியான காலக்கட்டத்தில் பதவியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு நடவடிக்கை, மாநில அரசின் உரிமைகள், தமிழகத்துக்கான புதிய திட்டங்கள், அரசுப் பணிகள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ‘சிறுவன் ஸ்டாலின்’, ‘இளைஞர் ஸ்டாலின்’, ‘போஸ்டர் ஒட்டிய ஸ்டாலின்’ என்று கலந்துகட்டிய ஒரு ஸ்டாலினை நம் கண்முன் நிறுத்தியபடி இருந்தது அவரது உரை.!

குறிப்பாக 29C பேருந்துடன் தன்னுடைய வாழ்வில் செலவழித்த நாட்கள், போஸ்டர் ஒட்டியதற்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டது, கல்லூரிக் கால அலப்பறை என கூட்டத்தை நெகிழ வைத்திருக்கிறார். 
இனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார்.!

‘சேத்துப்பட்டில் இருக்க கூடிய பள்ளியில்தான் நான் படித்தேன். கோபாலபுரத்தில் இருக்க கூடிய என்னுடைய வீட்டில் இருந்து நடந்துவந்து ஸ்டெல்லா மேரிஸ் பஸ் ஸ்டாண்டில் நின்று பேருந்தில் ஏறி பள்ளிக்குச் செல்வேன். அந்தப் பேருந்துடைய எண் 29C. அந்த பேருந்தைக்கூட 20 நாட்களுக்கு முன்பு வழியில் நிறுத்தி ஏறி, இலவச மகளிர் பயணத் திட்டத்தை நான் ஆய்வு செய்தேன். ஆக, ஸ்டெல்லா மேரிஸில் இருந்து அந்த பேருந்தில் ஏறி நுங்கம்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்து எனது பள்ளிக்குச் செல்வேன். மீண்டும் அதேமாதிரி ஸ்டெல்லா மேரிஸ் வந்து இறங்கி வீட்டிற்குச் செல்வேன். 

இதெல்லாம் மறக்க முடியாத நினைவாக எனக்குள் இருந்துகொண்டு இருக்கிறது.  இன்னொரு செய்தியை சொல்லியாக வேண்டும். 1971ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்கிறது. அந்த தேர்தலையொட்டி நான் பிரச்சார நாடகங்களில் பங்கேற்றேன். சென்னை முழுவதும் நாடகத்தை நடத்தினேன். அதற்கான விளம்பர போஸ்டர்களை கழக தோழர்களுடன் நானே சென்னை முழுவதும் ஒட்டினேன். விடிய விடிய போஸ்டர்களை ஒட்டிவிட்டு கடைசியாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகம் முன்பு வந்தோம். என்னோடு வந்த தோழர்கள் வரிசையாக போஸ்டர்களை ஒட்டிக்கொண்டு வருகிறார்கள். நான் சைக்கிள் ரிக்‌ஷாவில் அமர்ந்து, அசதியில் கண்ணயர்ந்துவிட்டேன். 

மேலும் படிக்க | ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..!

விடியற்காலை 4 மணி. என்னோடு வந்த தோழர் ஒருவர் ஸ்டெல்லா மேரிஸ் காம்பவுண்ட் சுவரில் போஸ்டரை ஒட்டிவிட்டார். அங்கு காவலுக்கு இருந்த காவலர் ஒருவர், ‘இங்கு போஸ்டர் ஒட்டக்கூடாது’ என்று சொல்லி வாக்குவாதம் நடக்க, பின்னர் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு புகார் செல்கிறது. அங்கிருந்து காவலர்கள் வந்து, எங்களை கடுமையாகக் கண்டித்து இன்னும் சொல்லப்போனால் போலீஸ் ஸ்டேஷனுக்கும் எங்கள கொண்டுபோய் உக்கார வெச்சு......அப்பக் கூட நான் யாருனு அங்க சொல்லல. சொல்லவும் விரும்பல. அப்படி நான் பயன்படுத்துபவனும் அல்ல.! 

அதற்குப் பிறகு அவர்களாக தெரிந்துகொண்டு எங்கள வெளிய அனுப்பிட்டாங்க. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், காவலர்களால் கண்டிக்கப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் போய் வந்ததற்கு காரணம் ஸ்டெல்லா மேரிஸ் காம்பவுண்ட் சுவரில் எழுதப்பட்டிருந்த Stick no bills வாசகம்தான். இன்றைக்கு அந்த காவல்துறைக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு, முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டு, அதே கல்லூரியில் உங்களையெல்லாம் வந்து சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன்.’ என்று தனது நினைவுகளைப் பகிரும் போது வளாகம் முழுவதும் மாணவியர்களின் கைத்தட்டல் அசரடித்தது. . 

கல்லூரிக் காலங்களில் மேடைகளில் யாரையும் உரையாற்ற விடாமல் அலப்பறை செய்யும் இளைஞர்களைப் போலத்தான் மு.க.ஸ்டாலினும் இருந்துள்ளார். அந்த ‘அலப்பறை ஸ்டாலினை’ அவரே பதிவு செய்கிறார்.

‘நானும் வந்ததுல இருந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். நானும் பள்ளியிலே படிக்கிற போது, கல்லூரியிலே படிக்கிற போது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு. அந்த நிகழ்ச்சிக்கு பல சிறப்பு விருந்தினங்களையெல்லாம் அழைத்துக் கொண்டு வந்து நடத்தியதுண்டு. ஆனால், அப்படி வரக்கூடியவர்கள் முழுமையாக பேச முடியாது. எதாவது சில்மிஷம் செஞ்சி, கரவொலி எழுப்பி, வந்தவர்கள் பேச முடியாமல் திருப்பி அனுப்பிவெச்ச வரலாறெல்லாம் எங்களுக்கு உண்டு. ஆனால் இன்றைக்கு அந்த நிலை இல்லை. வரும்போது கொஞ்சம் பயந்துகொண்டுதான் வந்தன். ஆனா, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்குற உங்களோட கட்டுப்பாட்ட பாக்குறப்போ உள்ளபடியே பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். தொடக்கத்தில் இருந்து முடிக்கிற வரைக்கும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, கரவொலி எழுப்பி அதே நேரத்தில் கட்டுப்பாடு இருந்ததற்கு எனது அன்பார்ந்த நன்றி’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.! 

மேலும் படிக்க | டெல்லி : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News