கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் தனியார் நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இந்த ஒப்பந்ததுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி என தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.
தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், "ஜெம் லெபாரட்டரி" நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் தமிழக அரசு ஒஎன்ஜிசிக்கு தரப்பட்ட குத்தகையை ஜெம் நிறுவனத்துக்கு மாற்றித் தரவில்லை. அதே வேளையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிரான வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. ஒருபக்கம் மக்கள் தொடர் போராட்டம், மறுபக்கம் வழக்கு மற்றும் குத்தகையை மாற்றி தருவதில் தாமதம் என பல பிரச்சனை வருவதால், "ஜெம் லெபாரட்டரி" நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுக்குறித்து "ஜெம் லெபாரட்டரி" நிறுவனம் சார்பில் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.