IPL 2024 SRH vs MI Records: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 8 போட்டிகளிலும் ஹோம் டீம்கள்தான் வெற்றியை ருசித்துள்ளன. மேலும், இந்த 8 போட்டியும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்புடனே நடந்து முடிந்தது எனலாம்.
அதிலும் நேற்றைய ஹைதராபாத் - மும்பை போட்டி என்பது டி20 ரசிகர்களுக்கு பெரும் விருந்தை அளித்தது எனலாம். ஒரு பக்கம் இதுபோன்ற ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு செய்யப்படும் துரோகம் என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், பேட்டர்களின் வாணவேடிக்கையையும் ரசிகர்கள் குதூகலத்துடன் ரசித்ததையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். கிரிக்கெட் விரும்பிகள் இதில் பல கருத்துகள் தெரிவித்தாலும் நேற்றைய ஹைதராபாத் - மும்பை போட்டி என்பது சர்வதேச டி20 அரங்கிலும் சரி, ஐபிஎல் வரலாற்றிலும் சரி பல புதிய சாதனைகளை படைத்திருக்கிறது.
5 சாதனைகள்
முதலில் பேட்டிங் செய்து 277 ரன்களை ஹைதராபாத் அணி குவித்தது. பவர்பிளேவில் டிராவிஸ் ஹெட், மிடில் ஓவர்களில் அபிஷேக் சர்மா, மற்ற ஓவர்களில் கிளாசென் - மார்க்ரம் என மும்பை பந்துவீச்சாளர்களை பதம்பார்த்துவிட்டனர் ஹைதராபாத் பேட்டர்கள். மும்பை பந்துவீச்சில் பியூஷ், ஹர்திக், கோட்ஸீ ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
மேலும் படிக்க | SRH vs MI: மும்பையின் அதிரடி ஆட்டம் வீண்! வெற்றி பெற்ற ஹைதராபாத்!
278 ரன்களை துரத்திய மும்பைக்கு இஷான் கிஷன், ரோஹித் சர்மா, திலக் வர்மா, நமன் திர் ஆகிய நால்வரும் சிறந்த தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும், கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகள் போகாமல் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் பார்த்துக்கொண்டதால் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதாவது, மும்பை அணியும் 246 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தாலும் இதில் பல பேரின் பங்களிப்பு இருந்ததை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில், ஹைதராபாத் - மும்பை போட்டியில் படைக்கப்பட்ட 5 சாதனைகளை இங்கு காணலாம்.
ஐபிஎல் அதிகபட்ச ஸ்கோர்
ஹைதராபாத் அணி நேற்று மும்பைக்கு எதிராக 277 ரன்களை குவித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன், 2013ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 263 ரன்களை சேர்த்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனை நேற்றைய தினம் உடைக்கப்பட்டது. மேலும், இரண்டாம் இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமையை மும்பை பெற்றது. ராஜஸ்தான் இதற்கு முன் 2020ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக 226 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது.
ஒரே போட்டியில் அதிக ரன்கள்
டி20 வரலாற்றில் ஒரே போட்டியில் (அதாவது இரண்டு இன்னிங்களில்) அதிகம் அடிக்கப்பட்டதும் இதுதான். ஹைதராபாத் 277 ரன்கள் மற்றும் மும்பை 246 ரன்கள் என 523 ரன்கள் நேற்றைய ஒரே போட்டியில் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சர்வதேச அளவில் ஒரே போட்டியில் தென்னாப்பிரிக்கா 259 ரன்களையும், மேற்கு இந்திய தீவுகள் 258 ரன்களையும் என 517 ரன்களை குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.
மேலும் படிக்க | 20 ஓவரில் 277 ரன்கள்! ஐபிஎல்லில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
10 ஓவர்களில் அதிக ரன்கள்
நேற்றைய போட்டியின் பவர்பிளேவில் ஹைதராபாத் 81 ரன்களை குவித்தது. அதுமிட்டுமின்றி முதல் 10 ஓவர்களில் 148 ரன்களை குவித்து மிரட்டியது. அதாவது, ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது இதுதான். அதேபோல், மும்பை அணியும் முதல் 10 ஓவர்களில் 141 ரன்களை குவித்தது, அந்த சாதனையை நூழிலையில் தவறவிட்டது. இதற்கு முன் பஞ்சாப் அணி 2014ஆம் ஆண்டில் ஹைதராபாத்திற்கு எதிராக 10 ஓவர்களில் 131 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள்
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று சிக்ஸர் மழைக்கு பஞ்சமே இல்லை. பந்துவீச்சாளர்களை பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பேட்டர்களும் சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டனர். ஹைதராபாத் 18 சிக்ஸர்களையும், மும்பை சிக்ஸர்களையும் குவித்து மொத்தம் 38 சிக்ஸர்களை நேற்றைய ஒரே போட்டியில் குவித்துள்ளனர். இதுதான் டி20 வரலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றில் தலா ஒரு போட்டியில் 37 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோசமான பந்துவீச்சு
வெறும் 17 வயதான குவேனா மபாகாவை பார்க்கத்தான் நேற்று பலருக்கும் சற்று பாவமாக இருந்தது. இவரை நேற்று ஹைதராபாத் பேட்டர்கள் பிரித்து மேய்ந்துவிட்டனர் எனலாம். நேற்றைய போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான மபாகாவின் 4 ஓவர்களில் 66 ரன்களை அடித்து மிரட்டினர். ஐபிஎல் வரலாற்றில் அறிமுக போட்டியில் மிக மோசமான பந்துவீச்சாக இது அமைந்தது. இதற்கு முன் 2013இல் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி சார்பில் அறிமுகமான மைக்கெல் நெசர் என்பவர் நான்கு ஓவர்களில் 62 ரன்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மபாகா?
மபாகா கடந்த ஜனவரியில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பெற்றவர். அதுமட்டுமின்றி, சில நாள்களுக்கு முன் பும்ராவை விட தான் சிறந்த பந்துவீச்சாளர் என நம்பிக்கையுடன் பேசிய வீரரும் இவரே...
மேலும் படிக்க | CSK vs GT: முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த சமீர் ரிஸ்வி! தோனி கொடுத்த ரியாக்சன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ