Video: கேட்டாரு கொடுத்துட்டாங்க... கை மாறிய பீல்டிங் பதக்கம் - இந்த முறை யாருக்கு தெரியுமா?

Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியில் சிறந்த பீல்டருக்கு வழங்கப்பட்டு வரும் தங்கப் பதக்கம் நியூசிலாந்து போட்டியில் யாருக்கு கிடைத்தது என்ற வீடியோவை பிசிசிஐ இன்று வெளியிட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 23, 2023, 01:44 PM IST
  • இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • ஜடேஜா, பும்ரா, ராகுல் உள்ளிட்டோரும் கேட்ச்களை தவறவிட்டனர்.
Video: கேட்டாரு கொடுத்துட்டாங்க... கை மாறிய பீல்டிங் பதக்கம் - இந்த முறை யாருக்கு தெரியுமா? title=

Indian Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) 21ஆவது லீக் போட்டி  தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று (அக். 23) நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா - நியூசிலாந்து (IND vs NZ) அணிகள் இந்த போட்டியில் மோதின. 

தொடரும் வெற்றி பயணம்

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. நியூசிலாந்தில் டேரில் மிட்செல் 130, ரச்சின் ரவீந்திரா 75 ரன்களை எடுக்க 50 ஓவர்களுக்கு 273 ரன்கள் எடுக்கப்பட்டது. ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடி வீரர் பிலிப்ஸை 23 ரன்களில் அவுட்டாகியதன் மூலம் நியூசிலாந்து பெரிய ஸ்கோருக்கு செல்லாமல் இந்தியா தடுத்துவிட்டது. 

இதன்மூலம், ரோஹித் - கில்லின் அதிரடி தொடக்கம், விராட் கோலியின் (Virat Kohli) நிதானம், ஜடேஜாவின் பினிஷிங் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் 48 ஓவர்களிலேயே இலக்கை எட்டி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. நியூசிலாந்து இந்த தொடரில் தனது முதல் தோல்வியை பதிவு செய்தது. விராட் கோலி 95 ரன்களை எடுத்திருந்தாலும், ஷமி ஆட்ட நாயகனாக தேர்வானர்.

மேலும் படிக்க | சுயநலவாதியா விராட் கோலி... சூர்யகுமார் ரன் அவுட்டுக்கு யார் காரணம்?

விராட், ஷர்துல், ராகுல், ஜேடஜா...

இந்தியா வெற்றி பெற்றது ஒருபுறம் இருக்க, இந்திய ரசிகர்கள் போட்டியின் பீல்டிங் பதக்கம் (Best Fielder Medal) யாருக்கு செல்கிறது என்பதை காண மிக ஆவலாக இருந்தனர். நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும், அன்றைய போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த ஒரு வீரருக்கு பதக்கத்தை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். முந்தைய போட்டியில் பதக்கம் பெற்றவர்கள் அடுத்த போட்டியில் வேறொருவருக்கு கொடுத்துவிடுவார்கள். 

அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கும், ஆப்கானிஸ்தான் போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுலுக்கும், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டது. வழக்கமாக பதக்கம் பெறும் வீரரின் பெயரை திலீப் திரையில் அறிவித்த நிலையில், கடந்த போட்டியின் போது புனே மைதானத்தில் இருந்த பெரிய ஸ்கோர் டிஸ்பிளேவில் ஜடேஜாவை வெற்றியாளராக அறிவித்தனர்.

அறிவித்த ஸ்பைடர் கேம்

எனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யார் பதக்கத்தை பெறுவார்கள், அதை எப்படி அறிவிப்பார்கள் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், பதக்கம் வழங்கிய நிகழ்வின் வீடியோவை பிசிசிஐ இன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டது. அதில், சிராஜ், ஷ்ரேயாஸ், விராட் கோலி, ஜடேஜா போன்றோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கேட்ச்களை தவறவிட்டாலும் அதனை திருத்திக்கொண்டு ஒட்டுமொத்தமாக கம்பேக் கொடுத்தது சிறப்பாக இருந்ததாக பயிற்சியாளர் திலீப் தெரிவித்தார். 

தொடர்ந்து, பதக்கம் பெறுபவரை இந்த முறை மைதானத்தில் இருந்த ஸ்பைடர் மூலம் தெரியப்படுத்தினர். ஸ்பைடர் கேமராவில் பதக்கம் பெறுபவரின் புகைப்படம் மாட்டிவிடப்பட்டிருந்தது. வீரர்கள் டிரஸ்ஸிங் ரூம்மில் இருந்து மைதானத்திற்குள் வந்த நிலையில், ஸ்பைடர் கேமரா வீரர்களை நோக்கி வந்தது. அதில், ஷ்ரேயாஸ் ஐயரின் (Shreyas Iyer) புகைப்படம் இருந்தது. வீரர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஷ்ரேயாஸ் ஐயரை குதுகலப்படுத்தினர். தொடர்ந்து, ஜடேஜா அந்த பதக்கத்தை ஷ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கினார்.

நேற்றைய போட்டியில் சிராஜ் பந்துவீச்சில் கான்வே கொடுத்த கேட்ச் ஷ்ரேயாஸ் ஐயர் கச்சிதமாக பிடித்தார். அந்த கேட்சை பிடித்த பின்னர், ஷ்ரேயாஸ் ஐயர் தனக்குதான் பதக்கம் என்பது போன்று செய்கை காட்டி கொண்டாடிய புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஜாம்பவான் லிஸ்டில் சுப்மான் கில் - அதிவேகமாக 2000 ரன்கள் குவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News