தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா 488 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ரான்சி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க ஆட்டக்காரராய் களமிறங்கிய மயங்க் அகர்வால் 10(19) ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்ற., மறுபுறம் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி 117*(164) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ரஹானே நிதானமாக விளையாடி 83(135) ரன்கள் குவித்தார். என்ற போதிலும் ஆட்டத்தின் 58-வது ஓவர் முடிவில் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 212(255) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ரஹானே 115(192) ரன்கள் குவித்தார். ரவிந்திர ஜடேஜா 51(119), உமேஷ் யாதவ் 31(10) ரன்கள் குவிக்க இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது. பின்னர் தங்களது ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்த தங்களது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த 5 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 9 ரன்கள் மட்டுமே குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் டென் ஈக்ளர் 0(2), குவின்டன் டி காக் 4(6) ரன்களுடன் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். தற்போது களத்தில் ஹாம்சா 0(14) மற்றும் டூப்ளசிஸ் 1(18) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.