இந்தியன் பிரீமியர் லீக்கின் 13-வது பதிப்பிற்காக காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது.
வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கப்பட இருந்த IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BCCI வட்டாரங்களின்படி, கொரோனா வைரஸ் தொற்று IPL 2020 மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இதனால் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் இதுவரை 47 பேர் கொரோனா வைரஸால் பாதித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக IPL 2020 போட்டியை ஒத்திவைக்க முடியுமா? ஒரு கேள்விக்கு பதிலளித்த BCCI வட்டாரங்கள், "IPL தொடங்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றன.
முன்னதாக, மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் சனிக்கிழமை ஒரு அறிக்கையில், நாடு முழுவதும் பரவிய அச்சம் காரணமாக IPL போட்டிகளின் திட்டமிடல் ஒத்திவைக்கப்படும் என்று கூறினார். "அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் ஒன்று சேருவதால் தொற்று மற்றும் நோய் பரவலாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், IPL போன்ற போட்டிகளை ஒத்திவைப்பது நல்லது" என தெரிவித்திருந்தார்.
மேலும் IPL 2020 நிறுத்தம் குறித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், அது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டோப் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, BCCI தலைவர் சவுரவ் கங்குலி, IPL 2020 போட்டி சரியான நேரத்தில் நடைபெறும் என்றும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். IPL இன்னும் தனது பாதையில் உள்ளது என்றும், போட்டிகளை எளிதாக்க வாரியம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.