2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இதற்கான ஏலம் நடந்து முடிந்தது. 2025 ஐபிஎல்லில் சில கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா அல்லது வெளிநாட்டு வீரர்கள் என யாரேனும் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களின் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 21 அல்லது 22 ஆம் தேதி தொடங்கும் என்றும், மே மாதம் இறுதி போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ஐசிசி விதிகள்
ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் தவறு செய்யும் பட்சத்தில் ஐசிசி விதிகளின்படி அபராதங்கள் நிலை 1, 2 அல்லது 3 குற்றங்களுக்கு விதிக்கப்படும். கடந்த ஆண்டு வரை ஐபிஎல் நிர்வாகம் அதன் சொந்த நடத்தை நெறிமுறைகளை பின்பற்றியது. இனி வரும் காலத்தில் ஐசிசி டி20 விதிமுறைகள் பின்பற்றப்படும்.
நிலை 1 குற்றங்கள்
கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஹர்ஷித் ராணா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது, மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு முத்தம் கொடுப்பது போல சைகை காட்டினார். இதற்காக நிலை 1 குற்றங்களை மீறியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 60% பிடித்தம் செய்யப்பட்டது. இது தவிர டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மீது மீண்டும் விதிகளை மீறியதால் ஹர்ஷித் ராணாவிற்கு 100% போட்டி கட்டணம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் ஒரு போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஹர்ஷித் ராணாவை தவிர டிம் டேவிட், விராட் கோலி, சாம் கர்ரன், ரசிக் சலாம் தார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ராமன்தீப் சிங், ஷிம்ரோன் ஹெட்மியர் போன்ற வீரர்கள் மீதும் லெவல் 1 குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
ஐபிஎல் ஏலம்
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் 2 நாட்கள் நடைபெற்ற மெகா ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றன. இந்த ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள் இடம்பெற்ற நிலையில், அதில் 182 வீரர்கள் 639.15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியும் தங்களை பலப்படுத்த வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ சில மாற்றங்களையும் செய்து இருந்தது. சில பழைய விதிமுறைகளை மீண்டும் கொண்டு வந்தது. இது சில அணிகளுக்கு சாதகமாக அமைந்தது. ஒரு சில அணிகள் தங்கள் பழைய வீரர்களை தேடி தேடி ஏலத்தில் எடுத்தனர். சில அணிகள் புதிய இளம் வீரர்களை எடுத்தனர்.
இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக மாறி உள்ளார். அவரை லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரை ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. மூன்றாவது அதிக விலைக்கு ஏலம் போன வீரராக வெங்கடேஷ் ஐயர் உள்ளார். அவரை கொல்கத்தா அணி ரூ. 23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ