வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் குவித்துள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. துவக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சில் திணறிய வங்கதேசம் ஆட்டத்தின் 58.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே குவித்தது.
அணியில் அதிகப்பட்சமாக முஷபிர் ரஹிம் 43(105) ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்த நிலையில் மொஹினுள் ஹாக்யூ 37(80) ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஷ்வின், இஷான்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்தியா தற்போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்றபோதிலும் ஆட்டத்தின் 7.2-வது பந்தில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 6(14) ரன்களுக்கு வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 43*(61) ரன்களுடன் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 37*(81) ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தற்போதை நிலவரப்படி இந்தியா வங்கதேச அணியை விட 64 ரன்கள் பின்தங்கி உள்ளது. 9 விக்கெட் இந்தியாவின் கையில் இருக்கும் நிலையில், ஒரு வலுவான இலக்கினை வங்கதேச அணிக்கு இந்தியா நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வீன் இரண்டு பெரிய சாதனைகளை பதிவு செய்தார். இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முற்பகுதியில் விக்கெட்டுகளை வீழ்த்த அஷ்வின் தவறிய போதிலும், பின்னர் இரண்டாம் பகுதியில் இரண்டு விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்தி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். இப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் சொந்த மண்ணில் 250+ விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக இப்பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள் பட்டியல்...
- அனில் கும்ப்ளே 350 விக்கெட்.
- ஹர்பஜன் சிங் 265 விக்கெட்.
- ரவிச்சந்திர அஷ்வின் 250* விக்கெட்.
அதேவேளையில் சொந்த மண்ணில் மிக விரைவாக 250+ விக்கெட் குவித்த வீரர்கள் பட்டியலிலும் அஷ்வின் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இவருக்கு முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரண் 40 போட்டிகளிலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே 41 போட்டிகளிலும் 250+ விக்கெட்டுகளை குவிக்க, ரவிச்சந்திர அஷ்வின் 42 போட்டிகளில் 250+ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.