மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India) தலைமையகத்தில் இந்திய பிரீமியர் லீக் கவுன்சில் (Indian Premier League) குழு இன்று கூடியது. ஐ.பி.எல் போட்டியின் அடுத்த தொடரில் "பவர் பிளேயர்" (Power Player) விதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இருப்பினும், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. ஐ.பி.எல் டி-20 போட்டியின் போது ஏற்படும் நோ-பால் (No Ball) சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதுக்குறித்து இறுதி முடிவு எடுக்க பி.சி.சி.ஐ தலைவர் சவுரக் கங்குலியிடம் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
"பவர் பிளேயர்" என்பது விக்கெட் வீழ்ந்த பிறகு அல்லது ஓவர் முடிந்த பிறகு எந்த நேரத்திலும் வீரரை மாற்றிக்கொள்ளலாம். "பவர் பிளேயர்" ஆட்டத்தில் களம் இறங்குவது குறித்து எந்தவொரு இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன், இது மேலும் பரிசீலிக்கப்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
நவம்பர் 8 ஆம் தேதி தொடங்க உள்ள சையத் முஸ்தாக் அலி டிராபியில் இந்த விதியைப் பயன்படுத்துவது சரியாக இருந்திருக்கும். ஆனால் போதுமான கால அவகாசம் இல்லாததால், அது தற்போதைக்கு சாத்தியமில்லை. ஐ.பி.எல் தொடரில் நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதைப் பற்றி மேலும் விவாதிக்க உள்ளோம் எனவும் கிரிக்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நோ-பால் குறித்து கண்காணிக்க கூடுதல் நடுவரைக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஐபிஎல் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர், "எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த ஐபிஎல் தொடரில் இரண்டு வழக்கமான நடுவர்களுடன், கூடுதலாக நடுவர் நியமிக்கப்படலாம். அவர் நோ-பால் குறித்து மட்டும் கண்காணித்துக் கொண்டே இருப்பார் எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம். அதற்காக நோ-பந்தை மேற்பார்வையிட ஒரு நடுவர் இருப்பார், அவர் நோ பந்தில் மட்டுமே கவனம் செலுத்துவார். அவர் மூன்றாவது மற்றும் நான்காவது நடுவராக செயல்படமாட்டார் என்றும் கூறினார்.
ஐபிஎல் 2020 குறித்து ஏலம் எப்போது நடக்கும் என்று கேட்டதற்கு, IPL ஏலம் டிசம்பர் 19 அன்று கொல்கத்தாவில் நடைபெறும் என்று கூறினார்.