நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதல் இரண்டு போட்டியிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40), மயங்க் அகர்வால் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய கோலி (9), ஸ்ரேயாஸ் (62) ரன்களில் வெளியேறினர். இதன்பின் கே.எல். ராகுல், மணீஷ் பாண்டேயுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 44 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரை பென்னட் வீசினார். இதில் 2வது பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்து சதம் பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 46 ஓவர்கள் முடிவில் 261 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.