15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. 2-வது அரை இறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் மோதின. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறு விறுப்பாக இருந்தது.
இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வசமே பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால் அவர்களை கோல் கம்பம் அருகே செல்ல விடாமல் பிரான்ஸ் வீரர்கள் தடுத்தனர். இதேபோல் பிரான்ஸ் அணிக்கு பல முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை ஜெர்மனி கோல் கீப்பர் தடுத்தனர். இரண்டு அணியும் கோல் அடிக்கத நிலையில் முதல் பாதியில் 45 நிமிடம் முடிந்து. வீணான நேரத்தை ஈடுகட்ட அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் போது பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
ஜெர்மனி கேப்டன் ஸ்சவெய்ன்ஸ்பீஜ்ர் கையில் பந்து பட்டதால் பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி கிர்ஸ்மென் அருமையாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதியில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அது பலிக்கவில்லை. அதற்கு மாறாக 72-வது நிமிடத்தில் பிரான்ஸ் 2-வது கோலை போட்டு ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த கோலை கிர்ஸ்மென் போட்டார்.
இதனால் பிரான்ஸ் வீரர் களும் உள்ளூர் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆட்டம் முடியும்வரை ஜெர்மனியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.