டேவிஸ் கோப்பை: ராம்குமார், யுகி 4-1 கணக்கில் இந்தியா வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், யுகி பாம்ப்ரி 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி.

Last Updated : Feb 6, 2017, 09:57 AM IST
டேவிஸ் கோப்பை: ராம்குமார், யுகி 4-1 கணக்கில் இந்தியா வெற்றி title=

புனே: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், யுகி பாம்ப்ரி 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானியா குரூப் 1-ல் இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மராட்டிய மாநிலம் புனே நகரில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி, ராம்குமார் வெற்றி பெற்றனர். 2-வது நாளில் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- விஷ்ணு வர்தன் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா, கடைசி நாளான நேற்று இரண்டு மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ஒன்றில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கியது.

முதலாவது மாற்று ஒற்றையரில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார், நியூசிலாந்தின் பின் டியர்னியை எதிர்கொண்டார். காற்றின் தாக்கத்தை சமாளித்து ஆதிக்கம் செலுத்திய ராம்குமார் முதல் செட்டை வெல்வதில் மட்டும் கொஞ்சம் தடுமாறினார். அடுத்த இரு செட்டுகளிலும் அவரது அதிரடிக்கு எதிராளியால் தாக்குப்பிடிக்க முடிவில்லை. 2 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் ராம்குமார் 7-5, 6-1, 6-0 என்ற நேர் செட்டில் டியர்னியை துவம்சம் செய்தார்.

ராம்குமாரின் வெற்றியின் மூலம் அடுத்த ஆட்டத்தின் முடிவு அவசியமில்லாமல் போய் விட்டது. கடைசி மாற்று ஒற்றையர் ஆட்டம் 3 செட் அடிப்படையில் நடத்த இரு அணிகளும் ஒப்புக் கொண்டன. அதன்படி அடியெடுத்து வைத்த இந்தியாவின் யுகி பாம்ப்ரி 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் நியூசிலாந்தின் ஜோஸ் ஸ்டாதமை அடக்கினார்.

இந்திய அணி அடுத்து உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறும். 

Trending News